Wednesday, September 18, 2013

Graduation Ceremony of Medical Research Foundation / Sankara Nethralaya/ Chennai 2013 - "மிகச் சிறந்த வல்லுநராக 10 ஆயிரம் மணி நேரம் பயிற்சி தேவை'

ஒரு துறையில் மிகச்சிறந்த வல்லுநராக 10 ஆயிரம் நேரம் வரை பயிற்சி செய்ய வேண்டும் என்று டாக்டர் டி.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் வித்யாசாகர் அறிவியல் மற்றும் உயிரி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் எலைட் பார்வையியல் துறை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சேத்துப்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் நுண்ணுயிரியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை பட்டம் மற்றும், ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு முனைவர் பட்டம் என மொத்தம் 46 மாணவர்களுக்கு பட்டம் பெற்றதற்கான சான்றிதழ்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டி.எஸ்.ரவிக்குமார் வழங்கினார்.
விழாவில் அவர் பேசியது:
நோயாளிகளை அன்புடன் அரவணைத்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவதே மருத்துவர்களின் மிக முக்கிய கடமையாகும். சேவைத்துறையின் மிக முக்கிய அங்கமாக மருத்துவப்பணி விளங்குகிறது.
சிறந்த கவனிப்பு, சிறந்த உடல் நலம் மற்றும் பொருளாதார ரீதியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிகிச்சை செலவு ஆகிய மூன்றும் அமையப்பெற்றால் உலக மக்கள் அனைவரும் நோயின்றி வாழ முடியும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சிகிச்சைகள் மூலம் நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். நாளும் பெருகி வரும் மருத்துவ ஆராய்ச்சிகளே அதற்கு சான்றாக விளங்குகிறது. மருத்துவர்களின் திறனை மேம்படுத்தவே பல்வேறு துறை சார்ந்த புதிய மருத்துவப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு துறையில் மிகச்சிறந்த வல்லுநராக உருவாக வேண்டுமானால் கட்டாயம் 10 ஆயிரம் மணி நேரம் வரை பயிற்சி செய்ய வேண்டும். ஒருவர் குறிப்பிட்ட துறையில் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது தொடக்கத்தில் கடினமாக தோன்றிய அனைத்தும் முடிவில் சதாரண விஷயமாக மாறி விடுகிறது.
தன்னலம் கருதாத சமூக மனப்பான்மையும், உள்ளத்திலிருந்து வெளிப்படும் மனிதநேயமும் மருத்துவர்களிடம் மேன்மேலும் பெருக வேண்டும். ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறை கண்டறிந்த மருந்துகளும், மற்றவர்களிடம் நாம் காட்டும் கருணையும் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
http://dinamani.com/edition_chennai/chennai/2013/09/19/மிகச்-சிறந்த-வல்லுநராக-10-ஆயிர/article1791513.ece

No comments:

Post a Comment