சமூகப் பணியில்
நிறுவனங்களின் பங்களிப்பு தேவை:
சமூக சேவையில்
நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என
பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் கூறினார்.
சென்னை சங்கர
நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் ஸ்ரீ சிவசைலம் கட்டடம் நுங்கம்பாக்கத்தில்
கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் முதல் தளம் கட்டுவதற்காக பாரத ஸ்டேட்
வங்கி சார்பில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில்
வங்கியின் நிர்வாக இயக்குநர் ஏ.கிருஷ்ணகுமார் ரூ.1 கோடியே 90 லட்சத்துக்கான
காசோலையை மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்திடம் வழங்கிப்
பேசியது: பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தரமிக்க சேவையை வழங்குவதோடு
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இயன்ற பங்களிப்பை அளித்து
வருகிறது.
மும்பை உள்ளிட்ட
பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிக்கும் கருவிகள்,
மின்விசிறிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
சங்கர நேத்ராலயா கண்
மருத்துமனை போன்று மக்களுக்கு சேவை புரியும் அறக்கட்டளைகள் நாட்டில் பல்கிப் பெருக
வேண்டும். அப்போதுதான் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலதரப்பினரும்
மேம்பட்ட மருத்துவ சேவையைப் பெற முடியும்.
மிகப்பெரிய நிறுவனங்கள்
மற்றும் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் இதுபோன்ற
அறக்கட்டளைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும் என்றார்
கிருஷ்ணகுமார்.
கண் மருத்துவத்தில்
சர்வதேச ரீதியிலான சிகிச்சைகள் அளிப்பதற்காக அறக்கட்டளையின் சார்பில் மொத்தம் ரூ.150
கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார
ரீதியாக பின்தங்கியுள்ளவர்கள் உயர் சிகிச்சைகளை சலுகை கட்டணத்தில் பெற முடியும்
என்று டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் கூறினார்.
சங்கர நேத்ராலயா கண்
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.பாஸ்கரன், துணைத் தலைவர் டாக்டர்
எஸ்.சுரேந்திரன், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல தலைமைப் பொதுமேலாளர் வர்ஷா
புரந்தரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment